தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு தயாரிக்கும் போது பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் பெருமாள் என்பவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனிச்சாமியின் மனைவி ஈஸ்வரி(52) என்பவர் பெருமாளிடம் சென்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவர் தொட்டாரடன் கோவில் அருகே இருக்கும் மரத்தடியில் அமர்ந்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெடி மருந்தில் தீப்பிடித்து ஈஸ்வரியின் முகம், உடலில் படுகாயம் ஏற்பட்டு வலியில் அலறி துடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஈஸ்வரியை மீட்டு திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான பெருமாளை தீவிரமாக தேடி வருகின்றனர்.