பொன்னியின் செல்வன் பாகம் – 1 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் 5500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் மூன்று நாட்களில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனை அடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த படத்துக்காக படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நடிகர்கள் நீண்ட தலைமுடி, தாடி வளர்த்தும், கடும் உடற்பயிற்சிகள் செய்தும் தோற்றத்தை மாற்றி காணப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை நடத்தினால் மீண்டும் அவர்களை பழைய தோற்றத்துக்கு கொண்டு வருவது கஷ்டம் என கருத்தில் கொண்டு முதல் பாகத்தை படமாக்கும் போதே இரண்டாம் பாகத்துக்கான முழு படப்பிடிப்பையும் சேர்த்து மணிரத்தினம் நடத்தி முடித்து விட்டார். தற்போது இரண்டாம் பாகம் படத்துக்கு கிராபிக்ஸ் ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகின்றது.
இந்த பணிகள் முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி 6 முதல் 9 மாதங்களுக்குள் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று மணிரத்தினம் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை வெளியிட ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.