தண்ணீரில் மூழ்கி 7 மாத குழந்தை மற்றும் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி பெரியார் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவருக்கு மாரியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதுரிதேவி(4) என்ற மகளும், நிரஞ்சனி என்ற 7 மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று காலை மாதுரிதேவி தாமிரபரணி ஆற்றை பார்க்க வேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் மாரியம்மாள் ஆட்டோவில் தனது குழந்தைகளுடன் சுத்தமல்லி அணைக்கட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக சிறுமி அணையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியம்மன் தனது கைக்குழந்தையுடன் அணையில் குதித்து மாதுரிதேவியை காப்பாற்ற முயன்றார். சிறிது நேரத்தில் சிறுமியும், கைக்குழந்தையும் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.