காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், இந்தியில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கிஷார் பி.பெலேகர் இயக்கத்தில் நடிக்கும் படம் ”காந்தி டாக்ஸ்” . இந்தியில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார். இப்படம் மௌன திரைப்படமாக இருப்பதால் அனைத்து மொழி தடைகளையும் உடைத்து கடந்த காலம் மௌன பட சகாப்தத்தை நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கிஷோர் பி.பெலேகர் கூறியுள்ளதாவது, மௌன படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல. இது கதை சொல்லின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமான சவாலும் கூட எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அறிமுக வீடியோவானது காந்தி பிறந்த நாளான நேற்று வெளியாகி இருக்கின்றது.