மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலின் மேற்கு பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் மர்ம நபர்கள் மணலை அள்ளுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து மணலை அள்ளி சென்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை பார்த்தனர். அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில் கிராம மக்கள் சார்பில் காவல் நிலையம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், நிலக்கோட்டை நீதிமன்றம் ஆகிய இடங்களில் இரவு பகலாக மணல் அள்ளுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.