Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போதையில் தலைமை ஆசிரியர்.. புகார் அளித்த பெற்றோர்கள்..!!

போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், புகார் அளித்த பெற்றோர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பாலியல் புகார்கள், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஒழுக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார்.

மேலூர் அருகே உள்ள வலையசேரி  கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளிக்கூடத்தில் வெறும் 23 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் கொட்டாம்பட்டியை  சேர்ந்த சரவணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மதுரையைச் சேர்ந்த குமரேசன் என்பவர் ஆசிரியராக உள்ளார். மூன்று ஆண்டுகளாக இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சரவணன் அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு மதுபோதையில் வருவதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த கிராம மக்கள் சரவணனை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனால் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தன் போக்கிலேயே இருந்துள்ளார் சரவணன். வழக்கமாக அடக்கி வாசிக்கும் இவர் சம்பவ தினத்தன்று  மது போதையில் தள்ளாடியபடி வகுப்பறைக்கு வந்துள்ளார்.

இந்த தகவல் கிராமத்திற்குள் பரவியதும் பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பொறுப்பற்ற ஆசிரியரை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |