பேருந்துகளில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டிலும் பக்கவாட்டிலும் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ அண்மையில் இணையத்தில் பரவியது. இதுபோல நேற்று முன்தினமும் செங்கம் சாலையில் சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து மாணவர்களிடம் கேட்டபோது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் சமயங்களில் மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என கூறுகின்றார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்கள் பேருந்துகளில் தொங்குவதால் உயிர் சேதம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்னதாகவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்க வேண்டும். மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.