போலீஸ் தேர்வுக்கு யூடியூப் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தவும், மூலை முடுக்கெல்லாம் உள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்திலும் இந்த கல்லூரியின் சார்பாக youtube சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் பயிற்சி காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு நவம்பர் 27ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான நேர்முக இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் போட்டி தேர்வு மையங்களான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியிலும், நந்தனம் அரசு கலைக்கல்லூரியும் நடைபெற்று வருகிறது. இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்வர்கள் பங்கேற்க முடியும்.
இதனால் மற்ற பகுதிகலில் வசிப்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே இந்த பயிற்சியை தமிழகமெங்கும் உள்ள அனைவருக்குமே கொண்டு செல்லும் விதமாக அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தன்னுடைய யூடியூப் சேனலில் இந்த தேர்வுக்கான பயிற்சி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது