தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திமுக தலைமையிலான அரசு முதல் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போது விவசாய திட்ட பணிகளுக்காக 250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து விவசாயம் செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இயற்கை வேளாண்மை மற்றும் விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டி பரிசு வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி புதிய விவசாய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும்.அதனைப் போலவே வேளாண் பணிகளை எளிதாக்கும் இயந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு, தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசு 60 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
விளை பொருள் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உழவன் என்ற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.