அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபமாக வெடித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன்பின் எடப்பாடியின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இதனால் அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு முக்குலத்தோர் ஆதரவு முழுவதுமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதை தெரிந்து கொண்ட இபிஎஸ் தன்னுடைய பக்கம் இருக்கும் சில அமைச்சர்களை வைத்து ஓபிஎஸ்-க்கு இருக்கும் முக்குலத்தோர் செல்வாக்கை முறியடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். அதோடு இபிஎஸ் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்ட துவக்கமாக எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு சென்றுள்ளார். இவருக்கு மதுரை விமான நிலையத்தில் ஆர்வி உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட சிலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிலையில் திருமங்கலம் மற்றும் விருதுநகர் சாலையின் இரு பக்கங்களிலும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதாவது அனைத்து மறவர் நல கூட்டமைப்பு என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் 20% இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், ஒட்டர், தொட்டிய நாயக்கர் போன்றோர் அடங்கிய 68 சீர் மரபு பழங்குடியினர் (DNT) உள்ளிட்ட 115 ஜாதியினரை வஞ்சித்து ஒரே ஜாதிக்கு 10.05% அளித்த எடப்பாடி அவர்களே! எங்கள் பகுதிக்கு வராதீர் வராதீர் வராதீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஓ. பன்னீர் செல்வத்தை ஆஃப் செய்ய திட்டமிட்டு கடைசியில் எடப்பாடி பழனிச்சாமி பல்பு வாங்கிய கதையாக ஆகிவிட்டது என்று அரசியல் வட்டாரத்தில் பலரும் கூறுகின்றனர்.