அதிகாரியின் காரை வழிமறித்து பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு நகரத்தெருவில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு மேகலாவின் கணவர் சுதாகர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது மகனும் கடந்த 2017-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி பலியானதால் மேகலா தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேகலாவுக்கு சொந்தமாக சிதம்பரபுரத்தில் இருக்கும் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேகலா அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று நெல்லை பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி கவிதா ராணி ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது மேகலா தனது மனுவின் நிலை குறித்து கேட்டு திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அதிகாரி தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட முயன்றதை பார்த்த மேகலா காரை வழிமறித்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து டி.ஐ.ஜி கவிதா ராணி காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.