மாநகர பேருந்து மீது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் விழுந்து மூன்று பேர் காயமடைந்தார்கள்.
சென்னையில் உள்ள ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று முன்தினம் காலையில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட தூண்களை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக குன்றத்தூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு மாநகர பேருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அதில் டிரைவர், கண்டக்டர் உட்பட எட்டு பேர் இருந்தார்கள். இந்த பேருந்தானது மெட்ரோ ரயில் வேலை நடைபெறும் இடம் அருகே வந்தபோது எதிர்பாரா விதமாக ராட்சத கிரேன் திடீரென சரிந்தது. இதில் பேருந்து முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதால் லாரி டிரைவர் ரஞ்சித் குமார், போக்குவரத்து ஊழியர் பூபாலன், பேருந்து டிரைவர் அய்யாதுரை உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தார்கள். இவர்கள் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.