இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயம் இந்தி மொழியே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ளிட்ட இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டி இருப்பதாக முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார்.
இந்தி பேசும் மாநிலங்கள் என்னும் மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி, ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனை தொடர்வதுடன் இந்தியா முழுமைக்கும் இந்தி மொழியை பொது மொழியாக மாற்ற பரிந்துரைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையின் வாயிலாக தெளிவுபடுத்தி இருக்கின்றார்.
இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்துமே சம உரிமையை கொண்ட மொழிகள். இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என அந்த மொழி பேசுபவர்கள் வலியுறுத்தி வரக்கூடிய சூழ்நிலையில், இந்தி மொழியை நாடு முழுமைக்கும் ஒரே பொது மொழியாக மாற்றக்கூடிய முயற்சி என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக முதலமைச்சர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.
வேற்றுமையில் ஒற்றுமையை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை சரிசமமாக நடத்திட வேண்டும் எனவும், அனைத்து மொழிகளுக்கும் மத்திய அரசினுடைய அலுவல் மொழி என்ற நிலையை ஏற்றிட வேண்டும் எனவும், அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம் என முதலமைச்சர் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கின்றார். எங்கள் தாய் மொழி உணர்வு என்னும் நெருப்பை உரசி பார்த்திட வேண்டாம் எனவும், இந்தியை கட்டாயமாக்குவதை கைவிட்டு இந்திய ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும் எனவும் பிரதமர் அவர்களை கேட்டுக்கொள்வதாக, மத்திய அரசை வலியுறுத்திக் கொள்வதாக முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கின்றார்.