இந்தியாவில் நிலவிவரும் பணவீக்கத்தை பொறுத்து வருடந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போவட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற மேமாதம் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதிகொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது. இதையடுத்து மொத்தவட்டி விகிதம் 4.40 சதவீதம் ஆக அதிகரித்தது. அதன்பின் சென்ற மாதம் ரெப்போவட்டி விகிதம் மீண்டுமாக உயர்த்தப்பட்டு, இப்போது 5.4 % ஆக இருந்து வருகிறது. இந்த ரெப்போவட்டி விகித உயர்வால் வங்கிகளில் கடன் பெற்றவர்களின் மாத EMI தொகை மற்றும் வட்டியானது அதிகரிக்கிறது.
அதேபோன்று சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் அதிகரித்து வருகிறது. இது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்புகணக்கு துவங்கியுள்ளவர்களுக்கு லாபத்தை அளிக்கிறது. அந்த அடிப்படையில் சென்ற ஜூன் மாதம் வங்கிகளில் பிக்சட் டெபாசிட், தொடர் வைப்புத் தொகை ஆகிய முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுத் துறை வங்கிகள் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது. எனினும் சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதங்கள் மட்டும் உயர்த்தப்படாமல் அதே நிலையில் நீடித்துவருகிறது. இதனால் இது முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்குரிய வட்டியை மத்திய அரசு உயர்த்த இருப்பதாக சீனியர் வங்கி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதன் காரணமாக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் ரிசர்வ் வங்கி மீண்டுமாக குறுகியகால கடனுக்கான ரெப்போவட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்த போவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துதான் காணப்படுகிறது. இதனால் சமீபத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ரெப்போவட்டி வீதம் உயர்வால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன்தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.