கிரேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 3 ரோடு ஜவகர் மில் எதிரே கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியது. இதனை மீட்பதற்காக கிரேன் சாலையின் குறுக்கே சென்று திருவகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது. அப்போது கோவை மாவட்டத்தில் இருந்து பயணிகளுடன் சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கிரேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
மேலும் ஓட்டுநர் ஜோதி வெங்கடேசன், கண்டக்டர் கோவிந்தராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். சாலையில் குறுக்கே கிரேன் வருவதை பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர் சாதூர்யமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.