இந்தியாவில் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கோவை மாவட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த வாரம் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனையை நடத்தப்பட்டது. இந்த சோதனையை நடத்திய தேசிய புலனாய் முதன்மை அதிகாரிகள் நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்தனர்.
தமிழகத்தில் நடந்த இந்த சோதனையை கண்டித்து, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக கோவை முழுவதுமே கடந்த வாரத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலையை நீட்டித்து வந்தது. கிட்டத்தட்ட 4000 மேற்பட்ட போலீசார் கோவை முழுவதிலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு, பி.எப்.ஐ அமைப்பிற்கு ஐந்தாண்டு தடை விதித்துள்ளது. pfi-யின் துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. pfi அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது pfi அமைப்பினரிடையே கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பி எஃப் ஐ அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் கோவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பதற்றமான சூழல் நிலவி இருந்த நிலையில், மீண்டும் கோவையில் பதற்றமான சூழல் வந்துள்ளது. கோவையில் இருக்கக்கூடிய டவுன் ஹால், உக்கடம், காந்திபுரம் என மக்கள் கூடும் இடங்களில், பிரதான பகுதிகளில் போலீசார் தற்போது ரோந்து பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோவை மாவட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பின் தலைமை அலுவலகத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் தற்போது மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உக்கடம் பகுதியில் பெண்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது, 50க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.