கந்தர்வக்கோட்டை அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என மாணவர்கள் தர்ணா போராட்டம் செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மருதன்கோண் என்ற ஊரில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.. இந்த கல்லூரியில் தற்போது 900க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மொத்தம் 49 பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் 2 பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.. 19 பேராசிரியர்கள் தற்காலிக பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 21 பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.மேலும் 28 இடம் காலியாக இருக்கிறது.
இதனால் கல்வி பாதிக்கப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதாவது இயற்பியல், வேதியியல் பேராசிரியர்கள் இல்லை, இந்த பாடப்பிரிவு எடுத்த மாணவ மாணவியர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். அதேபோல ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளது. ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியில் இது போன்று பேராசிரியர் பற்றாக் குறை 2 பாடப் பிரிவுக்கு பேராசிரியர் இல்லாத பற்றாக்குறை, அதுமட்டுமின்றி ஆய்வக உதவியாளர் பணி காலியாக உள்ளதால் அந்த மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் தான் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி இன்று இந்திய மாணவர் சங்கத்தின் துணையோடு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.