டெல்லியை தலைமையிடமாக கொண்டு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றத்தை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியதால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 103 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் 11 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையின் போது பல்வேறு இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதன் காரணமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் டெல்லி, உத்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் அசாம் உட்பட 8 மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரும், டெல்லியில் 6 பேரும், கர்நாடக மாநிலத்தில் 45 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் 120 கோடி ரூபாய் ஹவாலா பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.