சென்னை ராயப் பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்-26) ஆலோசனை மேற்கொண்டார். அதேபோன்று கட்சி அலுவலகத்தில் நடந்துவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார்.
அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்து வரும் புனரமைப்பு பணிகள் எப்படி நடைபெறுகிறது என பார்த்தார். சென்னையிலிருந்து மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சில பேர், அதிமுகவில் நேற்று தங்களை இணைத்துக்கொண்டனர். இதற்கிடையில் ஆந்திர திரைப்படத்தில் வரும் அமைச்சர்களைப் போன்று தி.மு.க அமைச்சர்கள் இருக்கின்றனர். பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசியது பெண் இனத்தையே அவமானப்படுத்தும் ஒரு செயல் ஆகும். அரசாங்க பணத்தில் பெண்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் என்ன பொன்முடியின் தந்தை வீட்டு பணத்திலா பயணம் செய்கிறார்கள்?… என்று பேசினார்.