தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற ஹாரர் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்தது. இவர் ஹிந்தியில் பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தின் ரீமிக்சை லட்சுமி என்ற பெயரில் இயக்கி இருந்தார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் 500 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, மாளவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு பி. வாசு பல வருடங்களாக சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்தார். அவரின் கனவு தற்போது தான் நினைவாகி சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசை அமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் 50 சதவீதம் கூட நிறைவடையாத நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு சந்திரமுகி 2 திரைப்படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானதில் இருந்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.