WhatsApp அழைப்புகளுக்கு இலவசம் என்ற நிலை மாறி, இனிவரும் காலங்களில் இணைய அழைப்புக்கு நீங்கள் பணம்செலுத்த வேண்டி இருக்கும். இந்திய தொலைத் தொடர்பு மசோதா 2022 எனும் புது மசோதாவை அரசு கொண்டுவருகிறது. இதற்குரிய வரைவு மசோதா முழுமையாக தயாரிக்கப்பட்டுவிட்டது. இவற்றில் டெலிகாம் குறித்த பல்வேறு மாற்றங்கள் அடங்கிய நிலையில், இணைய அழைப்பு தொடர்பாகவும் மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது. அதன்பின் சமூகஊடக செயலிகள் வாயிலாக செய்யப்படும் அழைப்புகளுக்கு நீங்கள் பணம்செலுத்த வேண்டியிருக்கும். இதுகுறித்து நாம் தெரிந்துகொள்வோம்.
அழைப்பு மற்றும் செய்தியிடல் வசதிகளை வழங்கும் வாட்ஸ்அப், ஸ்கைப், ஜூம் மற்றும் டெலிகிராம் ஆகிய தளங்களின் செயல்பாடுகள் பற்றிய பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது. இத்தளங்கள் இனிமேல் இந்தியாவில் செயல்பட தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போன்று உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதனால் இந்த செயலிகளிலிருந்து அழைப்புகளை மேற்கொள்ள பயனாளர்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
இப்போது வாட்ஸ்அப் அழைப்பு இலவசம் ஆகும். செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு பணம் எதுவும் செலுத்துவதில்லை. இருப்பினும் இணைய பயன்பாட்டிற்கு டேட்டா கட்டணமாக செலுத்துகிறோம். தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, உரிமம் வழங்குவதற்கான நடைமுறை கொண்டுவரப்பட்டால் பயனாளர்கள் இணைய கட்டணத்துடன் செயலிகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இப்போது இதுபற்றி எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்மசோதாவின் கீழ் டெலிகாம் ஆபரேட்டர்கள் பின்பற்றும் விதிகளைப் போன்றே, செயலிகளும் இந்த விதிகளைப் கடைபிடிக்க வேண்டும். இந்த மசோதாவில் OTT இயங்குதளங்களுக்கும் புதுவிதிகள் வரலாம் என்று கூறப்படுகிறது