அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்சட்டான ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் போன்றவற்றில் முறையீடு செய்திருக்கிறார். இருப்பினும் இதுவரை நடைபெற்ற சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி இருக்கிறது. மேலும் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதற்கிடையே கடந்த வாரம் தலைநகர் டெல்லிக்கு சென்று அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி விவகாரம் திமுக ஆட்சி சட்டம் ஒழுங்கு போன்றவை பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம் விரைவில் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஜே பி நட்டா போன்றோரை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடிக்கு அனுமதி கிடைக்காத சூழலில் எப்படியாவது பிரதமரை சந்தித்து விட வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் பிரதமர் மோடியை சந்தித்து விட்டால் டெல்லி ஆசி தனக்கு இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு காட்ட அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பயணத்தின் போது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் ஒ பன்னீர்செல்வம் விசிட் அடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது தொண்டர்கள் கையெழுத்துடன் கூடிய பிரமாண பத்திரத்தை அவர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.