வீட்டில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பஜனை கோவில் தெருவில் ரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாயும் மகனும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனை அடுத்து மதியம் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த நகை, பணம், மின்சாதன பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.