காவேரி டெல்டா பகுதியில் ஏற்க்கனவே உள்ள திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் ஏற்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவேரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதில் , தஞ்சை , திருவாரூர் , நாகை , புதுக்கோட்டை , கடலூர் ஆகிய மாவட்டங்கள் மட்டுமே டெல்டா பகுதியாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் , கரூர் , திருச்சி , அரியலூர் ஆகிய மாவட்டங்கள் விடுபட்டது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தார். அதே போல நடைமுறையில் இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டுமென்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்க்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி , காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே இருக்கும் திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல் ஏற்படும் என்று விளக்கம் அளித்திருக்கிறார். அதேபோல திருச்சி தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் அதை மண்டலத்திற்குள் கொண்டுவரவில்லை என்று கூறிய முதல்வர் தஞ்சை , நாகை ,திருவாரூர் , ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பிரதிநிதிகளாக குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.