தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் க.விலக்கு ரயில் ரோடு பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் பணியாற்றிய விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விட்டார்கள். இதனால் விடுதி பணியாளர் ஒருவர் சமையல் செய்ததாக சொல்லப்படுகின்றது.
இந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் தரமற்று இருப்பதாக கூறி விடுதியை விட்டு வெளியே வந்து அங்கிருக்கும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. பிறகு விடுதிகாப்பாளரை வரவழைத்து மாணவர்களின் புகார் குறித்து விளக்கம் கேட்டார்கள். அப்போது அவர் இனி வரும் நாட்களில் இது போன்ற புகார்கள் இல்லாதவாறு தரமான முறையில் உணவு வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.