ஆறு பேரை திருமணம் செய்து ஏழாவது திருமணத்திற்கு முயன்ற பெண் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவருக்கும் வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் சென்ற 7ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக மணமகளின் அக்கா- மாமா என இரண்டு பேர் மட்டுமே வந்ததாக சொல்லப்படுகின்றது. இத்திருமணத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாத்தான்குளத்தைச் சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடு செய்து அதற்கான கமிஷனாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு மணமகளில் அக்கா மற்றும் மாமா எனக் கூறி வந்த இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
பின் திருமணமாகிய மூன்றாவது நாளில் சந்தியாவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த தனபால் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சந்தியா, புரோக்கர் பால முருகன், உறவினர்களாக வந்த இரண்டு பேருக்கு தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அனைவரின் போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை திறந்து பார்த்தபோது திருமணப்பட்டுச் சேலை, சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை ஒருபுறம் நடத்த அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடிய பொழுது வேறு ஒரு புரோக்கர் மூலமாக சந்தியாவின் போட்டோ வந்ததை அறிந்த தனபால் அந்த நபர் மூலம் அவர்களைப் பிடிக்க எண்ணினார். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் காலை திருச்செங்கோட்டில் இருக்கும் கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்பட்டு மணப்பெண் சந்தியா மற்றும் அவரின் உறவினர்கள் எனக் கூறப்பட்ட நான்கு பேர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்தடைந்தார்கள்.
அப்போது தனபால் மற்றும் அவரின் உறவினர்கள் சந்தியா மற்றும் அவருடன் வந்தவர்களை மடக்கி பிடித்து வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இதன் பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை ஆரு திருமணம் நடத்தி நகை, பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் தற்பொழுது திருச்செங்கோட்டில் நடைபெற இருந்தது 7-வது திருமணமாம். இந்த நிலையில் போலீசார் சந்தியா, கௌதம், டிரைவர் ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து ரத்தினம் மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட இரண்டு பேரை தேடி வருகின்றார்கள்.