இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடங்கியுள்ளது. கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த பட ஷூட்டிங் சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணியின் போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்க பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சற்று முன் கிடைத்த தகவலின்படி உதவி இயக்குனர் கிருஷ்ணா,மது மற்றும் சந்திரன் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். இயக்குனர் ஷங்கர்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் 10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது . அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.