Categories
இந்து

கேதர்நாத் முதல் இராமேஸ்வரம் வரை… இந்தியாவில் வணங்க வேண்டிய 12 ஜோதிர்லிங்கங்க ஆலயங்கள்!

ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள்.

இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை.

எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது ஒளிமயமான லிங்கம் எனும் அர்த்தம் விளங்க ஜோதிர்லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. அவை குறித்து இங்கு காண்போம்,

1. கேதாரீஸ்வரர் – கேதர்நாத் (உத்ராஞ்சல்)
2. விஸ்வேஸ்வரர்- வாரணாசி (உத்ரபிரதேசம்)
3. சோமநாதேஸ்வரர் – சோமநாதம் (குஜராத்)
4. மகா காளேஸ்வரர் – உஜ்ஜயினி (மத்திய பிரதேசம்)
5. ஓங்காரேஸ்வரர் – இந்தூர் (மத்திய பிரதேசம்)
6. திரியம்பகேஸ்வரர் – நாசிக் (மகாராஷ்டிரம்)
7. குஸ்ருணேஸ்வரர் – ஓளரங்கபாத் (மகாராஷ்டிரம்)
8. நாகநாதேஸ்வரர் – ஓளண்டா (மகாராஷ்டிரம்)
9. வைத்தியநாதேஸ்வரர் – பரளி (மகாராஷ்டிரம்)
10. பீமசங்கரர் – பூனா (மகாராஷ்டிரம்)
11. மல்லிகார்ஜுனர் – ஸ்ரீ சைலம் (ஆந்திர பிரதேசம்)
12. இராமேஸ்வரர் – இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

இந்த கோவில்களின் சிறப்பம்சங்களையும், அங்கு எப்படி செல்வது என்பன குறித்தும் விரிவாக காண்போம்.

1. கேதாரீஸ்வரர் – கேதர்நாத் (உத்ராஞ்சல்)

உத்தரகண்ட் மாநிலத்தின் பனிபடர்ந்த இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் கேதார்நாத் கோயில் அமைந்திருக்கிறது. கேதார்நாத் கோயிலே 12 ஜோதிர்லிங்க கோயில்களில் சிவனின் கைலாய மலைக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் கோயிலாக கருதப்படுகிறது. இமயமலையில் உள்ள சுயம்புவாக உருவான பனி லிங்கம் இதுவாகும். கேதார்நாத் பகுதியில் நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் முதல் தீபாவளி திருநாள் வரையே திறந்திருக்கும். ஆலயத்தில் 6 மாத காலம் மானிட பூஜையும், 6 மாத காலம் தேவ பூஜையும் நடைபெறுகின்றன. தேவ பூஜை நடைபெறும் காலத்தில் இந்த ஆலயம் நடைசாத்தப்படும். மேலும் இக்கோயிலை சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்ற இடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.

2. விஸ்வேஸ்வரர்- வாரணாசி (உத்ரபிரதேசம்)

காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது. சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இங்கு விஸ்வநாதரை குங்குமப்பூ கலந்த பாலினால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட சந்திரபலம் அதிகமாகும்.

3. சோமநாதேஸ்வரர் – சோமநாதம் (குஜராத்)

ஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் சோம்நாத் கோயில் அமைந்திருக்கிறது. ஜோதிர்லிங்க யாத்திரை செல்வோர் முதலில் தரிசக்க வேண்டிய ஸ்தலமாக சோம்நாத் கோயில் கருதப்படுகிறது. சோம்நாத் கோயில் அமைந்திருக்கும் சோம்நாத் கடற்கரையிலிருந்து கடலுக்கு அப்பால் உள்ள அண்டார்டிகா கண்டம் வரைக்கும் இடையே எந்த நிலப்பகுதியும் இல்லை என்று கடற்பாதுகாப்பு சுவரில் உள்ள பான ஸ்தம்பத்தின் கல்வெட்டு கூறுகிறது. சோம்நாத் கோயில் 16 முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சந்திர பகவானின் சாபம் தீர்த்த தலம் இது என்பது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.

4. மகா காளேஸ்வரர் – உஜ்ஜயினி (மத்திய பிரதேசம்)

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் அமைந்திருக்கும் மஹாகாலேஷ்வர் கோயில் ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாலேஷ்வர் மட்டுமே தெற்கு நோக்கி அமையப்பெற்றிருக்கிறது. இந்த ஆலயம் 5 அடுக்குகளைக் கொண்ட அழகிய ஆலயமாகும். இங்கு கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமியில் வழிபாடு செய்வது விசேஷமான ஒன்று. தோல் வியாதிகளை நீக்கும் கோடி தீர்த்தம் இந்த ஆலயத்தில்தான் இருக்கிறது.

5. ஓங்காரேஸ்வரர் – இந்தூர் (மத்திய பிரதேசம்)

மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து 281 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இந்த கோயில் அமையப்பெற்றுள்ள தீவின் வடிவத்தை ‘ஓம்’ என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். ஓங்காரம். இங்கு ஓம்காரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த தீவில் ஜோதிர்லிங்க கோயிலான ஓங்காரேஸ்வரர் கோயிலை போலவே அமரேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் அமையப்பெற்றுள்ளது.

6. திரியம்பகேஸ்வரர் – நாசிக் (மகாராஷ்டிரா) 

மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து 28 கிமீ தொலைவில் திரிம்பாக் என்னும் நகரில் திரிம்பகேஷ்வர் ஆலயம் அமைந்திருக்கிறது. திரிம்பகேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டு அழகிய சிற்பங்களுடன் காட்சியளிக்கிறது. ஆலயக் கருவறையில் இருந்து எப்போதும் நீர் ஊறிக் கொண்டே இருப்பது தனிச் சிறப்பு. இங்கு சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். கோதாவதி நதி உற்பத்தியாகும் இடம் இது என்று கூறப்படுகிறது.

7. குஸ்ருணேஸ்வரர் – ஓளரங்கபாத்  (மகாராஷ்டிரா) 

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்க பாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோரா குகையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் குஸ்ருணேஸ்வரம் உள்ளது. இங்குதான் குஸ்ருணேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவனை, அம்பாள் குங்குமப்பூவால் வழிபட்ட தலம் இதுவாகும். அதனால் தான் இந்தத் தலத்திற்கு குஸ்ருணேஸ்வரம் என்று பெயர். குஸ்ருணம் என்றால் குங்குமம் என்று பொருள்.

8. நாகநாதேஸ்வரர் – ஓளண்டா (மகாராஷ்டிரா)

மகாராஷ்டிரா மாநிலம் ஓளண்டா நகரத்தில் உள்ள துவாரகையின் அருகே உள்ளது நாகநாதேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் ஒரு காட்டுக் கோவிலாகும். தாருகாவனம் என்று சொல்லப்படும் காட்டின் பகுதியில் அமைந்திருக்கிறது. வாமதேவர் வழிபாடு செய்ய வேண்டும் என் பதற்காக இத்தல இறைவன் திரும்பிய திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய படி லிங்க உருவில் காட்சியளிக்கிறார். நாகநாதேஸ்வரர் கோயிலில் ஜாகேஷ்வர் மழைக்கால திருவிழா, மஹாசிவராத்திரி மேளா ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

9. வைத்தியநாதேஸ்வரர் – பரளி (மகாராஷ்டிரா)

ஜார்கண்ட் மாநிலம் தேவ்கர் என்ற இடத்தில் இருக்கிறது வைத்தியநாதர் திருக்கோவில். இதனை சித்த பூமி என்றும் அழைப்பார்கள். திருமாலின் லீலையால், ராவணன் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கம், தங்கி விட்ட திருத்தலம் இது. பல மாநிலங்களில் இந்த தலத்தை வைத்தியநாதம் என்று அழைக்கிறார்கள்.

10. பீமசங்கரர் – பூனா (மகாராஷ்டிரா)

மகாராஷ்டிரா மாநிலம் புனேனவில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பீமசங்கரர் திருக்கோவில். பொதுவாக எல்லா சிவன்கோவில்களிலும் மூலவரின் கருவறைக்கு முன்பாக நந்தி சிலை இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் நந்திக்கு பதிலாக ஆமை உருவம் வடித்து வைக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். எந்த விஷயத்திற்காகவும் அவசரம் காட் டக்கூடாது என்பதை வலியுறுத்து வதற்காக இந்த ஆமை உருவம் வைக்கப்பட்டுள்ளதாம்.

11. மல்லிகார்ஜுனர் – ஸ்ரீ சைலம் (ஆந்திர பிரதேசம்)

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புனித நகரமான ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனா கோயில் அமையப்பெற்றிருக்கிறது. கர்நூல் மாவட்டம் நந்தியாவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக் கிறது. இங்கு நந்தியே மலையாக இருந்து சிவ பெருமானை தாங்குவதாக தல புராணம் தெரிவிக்கிறது. மல்லிகார்ஜுனா கோயில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவதோடு 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றகாவும் சிறப்பு பெறுகிறது. இங்குதான் ஆதி சங்கரர் தன்னுடைய புகழ்பெற்ற ‘சிவானந்த லஹிரி’ எனும் கவிதைகளை படைத்தார் என்று நம்பப்படுகிறது.

12. இராமேஸ்வரர் – இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ராம நாதர் ஆலயம் உள்ளது. 12 ஜோதிர் லிங்கங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஆலயம் இது. இங்குள்ள இறைவனுக்கு கங்கை நீரை கொண்டு வந்து அபிஷேகிப்பது வழக்கம். இந்த தலத்தில் மட்டும் கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம். ஆஞ்சநேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும், ராமபிரான் பூஜை செய்த சிறப்புக்குரிய தலம். இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் ‘இராம+ஈஸ்வரம்’ இராமேஸ்வரம் ஆனது.

Categories

Tech |