இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் ஒரு தனி மனிதரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கும். இந்த ஆதார் அட்டையானது நாட்டில் உள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதன் காரணமாக ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களோடு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
அதற்கு முதலில் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.onlinesbi.com என்ற முகவரிக்குள் சென்று, இணைய வங்கி கணக்கில் நுழைந்து இ-சேவைகள் பிரிவில் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் வங்கி கணக்குடன் ஆதாரை புதுப்பிப்பதற்கு சிஐஎஃப் என்ற விருப்பத்தை தேர்வு செய்து, பாஸ்வேர்டை உள்ளிட்டு சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் சிஐஎஃப் எண் தோன்றும். இதில் உங்கள் ஆதார் எண்ணை 2 முறை உள்ளிட்டு சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.
இதனையடுத்து ஏடிஎம் கார்டு மூலமாகவும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம்-க்கு செல்ல வேண்டும். அதன்பின் ஏடிஎம் மிஷினில் கார்டை ஸ்வைப் செய்து பின்னை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பின் சேவை பதிவு விருப்பத்தை தேர்வு செய்து விட்டு, ஆதார் பதிவு விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விட்டு, உறுதி செய்வதற்காக மீண்டும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். உங்கள் கோரிக்கை வங்கியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.
இதைத்தொடர்ந்து எஸ்பிஐ யோனா ஆப் மூலமாகவும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் எஸ்பிஐ யோனா அல்லது எஸ்பிஐ யோனா லைட் மொபைல் செயலிக்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு விரைவு இணைப்புகளின் கீழ் சேவை கோரிக்கை என்பதை கிளிக் செய்து விட்டு, சுயவிவரம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் இணைப்பு விருப்பத்தை தேர்வு செய்த பிறகு, 12 இலக்க ஆதார் எண் உள்பட அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும். உங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ளலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவு செய்த மொபைல் நம்பரை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இந்த மொபைல் நம்பரில் இருந்து யூஐடி<இடம்>ஆதார் எண்>கணக்கு எண்> என்ற வடிவமைப்பில் 567676 என்ற நம்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன்பின் ஆதாரை பதிவு செய்ததற்கான உறுதிப்படுத்துதல் செய்தியை பெறுவீர்கள். உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், அது தொடர்பான மெசேஜ் வரும்.