மோட்டார் சைக்கிள் மீது பால் வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூர்த்தி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஹரி கிருஷ்ணன்(19) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் ராயக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பின்னர் இரவு நேரத்தில் இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குட்டூர் பிரிவு ரோடு பகுதியில் சென்ற போது ராயக்கோட்டை நோக்கி வேகமாக சென்ற பால் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரி கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.