மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளை கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கியில் உள்ள உரங்கள் மற்றும் இடுபொருள்கள் போன்றவற்றையும் பார்வையிட்டார். அதன் பிறகு 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். இதனையடுத்து நியாய விலை கடைகளில் ஆய்வு செய்த போது பொது மக்களிடம் அரிசியின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 800 மூட்டை நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் 2 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
250 மூட்டைகளுக்கு மேல் நெல் கொள்முதல் செய்பவர்களின் மொபைல் டிபிசி திறப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகாரிகள் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை கனிவுடன் கூற முடியும். கடந்த வருடம் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 117 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 120 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் கொடுக்கும் நிலையமாக மட்டும் இல்லாமல், வங்கிகள் போன்ற பல்வேறு சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.