விஷால், லைகா நிறுவனம் வழக்கானது அடுத்த மாதம் தள்ளி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார் விஷால். இவர் தனது நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனை லைகா நிறுவனம் செலுத்தியுள்ளது.
மேலும் பணத்தை திருப்பி லைகா நிறுவனத்திடம் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் படங்களின் அனைத்து உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரித்த ஐகோர்ட் 15 கோடி ரூபாயை நீதிமன்றம் தலைமை பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கி ஒன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த பொழுது விஷால் நேரில் ஆஜராகி, இந்த உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால் பணத்தை செலுத்த முடியவில்லை எனவும் தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அதை அடைக்கவே படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து விஷாலின் விளக்கத்தையும் அவரின் வருமான விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மீண்டும் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த பொழுது பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் விஷால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியது. மேலும் அடுத்த விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கானது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது 15 கோடியை வங்கியில் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருக்கின்றது. அதனால் இவ்வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என விஷால் கூறியதை தொடர்ந்து அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது.