தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சுராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வாயிலாக வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அத்துடன் மாரி செல்வராஜ் இயக்கிவரும் மாமன்னன் படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்யவந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பானது கொடுக்கப்பட்டது. அதன்பின் கோவிலுக்கு சென்று அவர் முருகனை வழிபட்டார்.
அத்துடன் கோவில் பிரகாரத்திலுள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபட்ட பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, “நான் இப்போது நடித்து வெளிவரப் போகும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2ஆம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் படம் நன்றாக வந்திருக்கிறது.
இந்த படத்தில் நான் குணசித்திர நடிகனாக நடித்துள்ளேன். நான் நடித்துள்ள படங்களில் மக்கள் எதிர்பார்க்கக்கூடிய காமெடிகள் மேலும் அதிகமாகவே இருக்கும். நாய் சேகர் திரைப்படத்தில் பாடல் பாடியுள்ளேன். அந்த பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும். என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்குரிய காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. இனிவரும் படங்களில் அவர்களை இணைத்துக் கொண்டு நடிப்பேன். உடல்நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால்முயன்ற உதவியை செய்வேன்” என்று கூறினார்.