ஆண்டிபட்டி அருகே வீட்டை இடிக்க முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியை அடுத்திருக்கும் சக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடை, மாட்டு கொட்டகை உள்ளிட்டவற்றை கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதனால் சிலர் அரசு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரசு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வீடு, கடை உள்ளிட்டவற்றை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் சென்றார்கள். அப்பொழுது வீட்டில் இருந்த லிங்கராஜனின் மனைவி பஞ்சவர்ணம் வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பஞ்சவர்ணத்தின் மீது தண்ணீரை ஊற்ற முயன்றார்கள். ஆனால் பஞ்சவர்ணம் அங்கிருந்து ஓடியதால் போலீசார் அவரை விரட்டி சென்று உடலில் தண்ணீரில் ஊற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வீடு, கடை, மாட்டு கொட்டகை உள்ளிடவற்றை அகற்றினார்கள். மேலும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும் தீக்குளிக்க முயன்றதற்காகவும் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.