மகனை அடித்த ஆசிரியரை தந்தை பெல்டால் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்தவர் எட்வின் ராஜ். இவர் புதுவையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தபொழுது தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எட்வின் ராஜ் அடித்துள்ளார். பின்னர் அதே மாணவன் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்துள்ளார் எட்வின் ராஜ். இதனைத்தொடர்ந்து மாணவன் கோபம்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் மாணவனின் தந்தை பள்ளிக்கு வந்து எட்வின் ராஜை சந்தித்து எதற்காக தனது மகனை அடித்தீர்கள் என கேட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறில் மதுபோதையில் இருந்த மாணவனின் தந்தை ஆசிரியரை தகாத வார்த்தைகளினால் திட்டியும் தனது பெல்டினால் ஆசிரியரை தாக்கியும் உள்ளார். இதனால் ஆசிரியர் பலத்த காயம் அடைந்தார். உடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் எட்வின் ராஜை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற எட்வின் ராஜ் பெரியகடை காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை செல்வகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.