திமுக எம்.பி ஆ.ராசா இந்துக்குள் பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது. அவருக்கு பாஜக-வினர், இந்துஅமைப்பினர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “இந்துமதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் அனைவரும் சமூகவலைத்தளத்தில் இந்த கருத்தை கண்டித்து இருக்கின்றனர். இது போன்று திமுக தலைவர்கள் பேசுவது தமிழகத்தில் புதுசு கிடையாது.
ஆண்டுக்கு ஒருமுறை தி.மு.க-வின் சிறிய தலைவர்கள் இப்படி பேசுவதை தமிழகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. எனினும் ஒவ்வொரு முறையும் ஏன் பேசுகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. அவ்வாறு ஒவ்வொரு முறையும் ஏன் பேச வேண்டும்?.. இந்து சனாதன தர்மம் என்ற வார்த்தையை இங்கு கொண்டுவந்து அதன் அர்த்தத்தை திரித்து, அது ஏதோ ஆகாத வார்த்தையைப் போல் பிரசாரத்தை மேற்கொண்டு, அதன் வாயிலாக மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். வெந்த புண்ணில் வேலைபாய்ச்சுவது போன்று, ஆ.ராசா அவர்கள் தான் சொன்ன வாதம் சரி தான் என மறுபடியும் பேசுகிறார்.
இந்து பெண்களின் மனதை புண்படுத்தும் அடிப்படையில் பேசியிருக்கிறார். ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களுக்கு தெரியாத ஒரு சனாதனதர்மம் அண்ணன் ராசா அவர்களுக்கு தெரிந்திருக்காது. இந்துசமயத்தில் சனாதன தர்மத்தின் படி எந்தஒரு சாதிக்கும் உயர்சாதி, கீழ்சாதி என கூறுவதற்கு அருகதை கிடையாது என மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்த ராமானுஜர் பிறந்த மதம் இது. இதனால் தான் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் கடைசி காலத்தில் ராமானுஜரின் சரித்திரத்தை எழுதினார். அதன் வாயிலாக தனக்கு மோட்சம் கிடைக்கும் எனும் நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கலாம். தி.மு.க தலைவர்கள் தொடர்ந்து ஏன் சர்ச்சைபேச்சு பேசவேண்டும்..?
காரணம் என்னவெனில் தமிழக மக்களின் கோபம் எல்லை கடந்து சென்று விட்டது என்பது அவர்களுக்கு தெரிந்து விட்டது. இந்த ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நல்லது நடக்கவில்லை என்பது தி.மு.க அரசுக்கே தெரிந்த ஒன்று. இதேப்போன்ற சர்ச்சை பேச்சு வாயிலாக மக்களின் கவனத்தை திருப்பி, அதனை பேசுபொருளாக நடத்திகாட்டலாம் என தி.மு.க நினைத்தால் அது மாபெரும் தவறாகும். அரசியல் தரம் தாழ்ந்து ராசா பேசிவருகிறார். அதன் வெளிப்பாடு தமிழகம் முழுதும் நடந்து கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளே அனுப்புவது திமுக அரசின் புதிய வாடிக்கையாக இருக்கிறது.
உதாரணமாக கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, அதற்கு முன் கள்ளக்குறிச்சி, கோவில்பட்டி, வேலூரில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த விஷயத்தில் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக தமிழகம் முழுதும் கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். காவல்துறையை தடுத்ததாக ஒரு வழக்குப்பதிவு செய்கிறார்கள். இவர்கள் பேசிய கருத்துக்கள் வாயிலாக சமுதாயத்திற்கு இடையே பிரச்னையை உருவாக்குதல் (153 ஐபிசி) என்ற செக்சனில் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அதன்படி, ராசா அவர்கள் பேசிய கருத்துக்களால் சமுதாயத்திற்கிடையே பிளவு ஏற்படாதாம். அதனை கண்டித்து கேட்ட பாஜக தொண்டர்களின் கருத்துக்களால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும் என்று கூறி இருக்கின்றனர்” என்று அவர் பேசினார்..