கூடலுரில் இருந்து தாளூருக்கு கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் தாளூர் தனியார் கல்லூரியிலும் பல பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றார்கள். கூடலூர் போக்குவரத்து கழக கிளையிலிருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, கையுன்னி, எருமாடு வழியாக தாளூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து தாளூருக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் காலை, மாலை நேரங்களில் மாணவ மாணவிகள், பொதுமக்கள் வீடுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். மேலும் வனவிலங்குகளின் அட்டகாசமும் இருக்கின்றது. இதனால் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.