3 வயது குழந்தையுடன் இளம்பெண் கணவர் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் கொல்லுபட்டறை தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு விஜயகுமாருக்கு மஞ்சுளா(29) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆண்டு மஞ்சுளா வயிற்றிலேயே 10 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக மஞ்சுளா திருவாரூரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வல்லத்தில் இருக்கும் கணவர் வீட்டிற்கும் மஞ்சுளா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது விஜயகுமார் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் குழந்தையுடன் கடந்த இரண்டு நாட்களாக மஞ்சுளாவும், அவரது உறவினர்களும் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் அனைத்து மகளிர் போலீசார் மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து மஞ்சுளா, விஜயகுமார் ஆகிய இருவரையும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்போது எனக்கு நேரம் சரியில்லை. எனவே மூன்று மாதத்திற்குள் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு விஜயகுமார் சென்றுள்ளார். பின்னர் மஞ்சுளா தனது குழந்தையுடன் பெற்றோருடன் வீட்டிற்கு சென்றார்.