சாதி அடிப்படையில் செங்கோட்டையன் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளிக்க வேண்டும் என்று கோவை செல்வ ராஜ் வலியுறுத்தி இருக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகமும், ஜெயக்குமாரும் அரசியல் தலைவர்கள் அல்ல சர்க்கஸ் கோமாளிகள் என்று கோவை செல்வ ராஜ் காட்டமாக விமர்சித்து இருக்கிறார். சென்னை பசுமைவழி சாலையிலுள்ள ஒ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கோவை செல்வ ராஜ் கூறியதாவது “நேற்றைய தினம் நடந்த பொது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தானும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே சாதி. எங்கள் சாதியை சேர்ந்தவர்கள்தான் தமிழகத்தில் முதல்வராக வரமுடியும் என கூறியதாக குறிப்பிட்டு, அதிமுக-வில் மூத்த தலைவராக உள்ளவர் சாதி அடிப்படையில் பேசியிருப்பது வெட்கக்கேடானது என விமர்சித்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சாதியைப் பார்த்து வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். விசுவாசத்தை பார்த்து தான் வாய்ப்பு கொடுப்பார்கள் என கோவை செல்வராஜ் கூறினார்.
சாதிவெறியை அடக்கியவர், ஒடுக்கியவர் எம்.ஜி ஆர். அப்படிப்பட்ட புனிதமான இந்த அதிமுக-வில் செங்கோட்டையன் சாதி வெறியோடு நடந்துகொண்டது கண்டிக்கதக்கது. அ.தி.மு.க வரலாற்றில் சாதியே இருந்தது இல்லை. சாதியை பற்றி ஜெயலலிதாவும் பேசியது கிடையாது. அனைத்துசாதி மக்களுக்கும் அவர் வாய்ப்பளிப்பார். ஆகவே செங்கோட்டையன் அதிமுக-விலிருந்து விலகவேண்டும். இல்லையெனில் வரும் தேர்தல் தான் அவருக்கு கடைசி தேர்தலாக இருக்கும்” என தெரிவித்தார். இதனிடையில் எடப்பாடி பழனிச்சாமி சாதிய வெறியோடு நடந்து கொள்கிறார். அதன் வெளிப்பாடுதான் செங்கோட்டையன் பேசியது” என்று அவர் விமர்சித்தார்.