8-ஆம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் இந்திரா நகரில் கோபால்- ஜெயசக்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிருந்தா(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிருந்தா தனது பெரியம்மாவுடன் அருகே இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கால் தவறி 60 அடி கிணற்றுக்குள் பிருந்தா விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெரியம்மா காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சிறுமியை தேடியுள்ளனர்.
ஆனாலும் பிருந்தாவை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக தீனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிருந்தாவின் உடலை மீட்டனர். பின்னர் சிறுமியின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.