முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் நேற்று கராச்சியில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து பாபர் அசாம் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் வந்த ஹைதர் அலி 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து வந்த ஷான் மசூத் 7 ரன்களுக்கும், அதிரடியாக ஆடிவந்த ரிஸ்வான் 68(46) ரன்களுக்கும் ஆட்டம் இழந்து வெளியேறினர். பின்னர் 5ஆவது விக்கெட்டுக்கு இப்திகார் அகமது மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆடினர். இதில் நவாஸ் வந்த வேகத்திலேயே 4 ரன்களுக்கு அவுட்டாகி நடையை கட்டினார்..
இதையடுத்து குஷ்தில் ஷா களமிறங்க இறுதியில் பாகிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஷ்தில் ஷா 5 ரன்களுடனும், உஸ்மான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் லூக் வுட் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும், சாம் கரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்..
இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினார். இந்த ஜோடியில் பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற, அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த டேவிட் மலான் 20 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார்.
இதையடுத்து வந்த ஹேரி ப்ரூக் அலெக்ஸ் ஹேல்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வந்த நிலையில் அலெக்ஸ் தனது அரைசதத்தை பதிவு செய்த நிலையில் அவரும் 53(40) ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். அதன் பின் ப்ரூக்குடன் கேப்டன் மொயின் அலி இணைந்தார்.. கடைசியில் அதிரடி காட்டிய ப்ரூக் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.. அவருடன் மொயின் அலி 7 ரன்களுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்..
இறுதியில் இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்து வென்றது.. பாகிஸ்தான அணி சார்பில் அதிகபட்சமாக உஸ்மான் 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது..