நவராத்திரி விழாவானது எப்படி வந்தது என்பது குறித்த ஆன்மீக கதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சும்பன், நிசும்பன் என்று இரண்டு அசுரர்கள் முன்பொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் தெய்வத்திடம் வரம் பெற்று தங்களை யாரும் அழிக்க பிறக்கவில்லை என்று கர்வம் கொண்டு திரிந்தார்கள். அவர்களுடைய ஆட்சி காலத்தில் மக்கள் மிகவும் துன்பத்தைப் பெற்று வந்தனர். இப்படியே போனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற எண்ணிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடமும், சிவனிடமும் சென்று முறையிட்டார்கள். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என்று ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
ஆண்கள் யாராலும் அந்த இரண்டு அரக்கர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும், மூவர்களும் அன்னை ஆதிசக்தியை நோக்கி பிரார்த்தனை செய்தார்கள். மக்களின் துன்பத்தை கண்டு அவளும் பெண்ணாக வடிவம் எடுத்து பூமிக்கு வந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரும் தங்களுடைய சக்திகளை ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்தனர். பின்னர் அவர்கள் சிலை ஆனார்கள். அதேபோல இந்திரனும் அஷ்டதிக்கு பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படியே அவர்கள் சிலையாக நின்றதால் தான் அதனைக் குறிக்கும் விதமாக நவராத்திரிக்கு கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை கரங்களில் தாங்கிக் கொண்டு போர் கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும் அவர்களுடைய படை தளபதிகளான மது, கைடபவன், ரக்த பீஜனையும் அழித்து தர்மத்தை நிலை நாட்டினார்.