இளைஞர் ஒருவர் பெண் போலீசாரை அவதூறாக சித்தரித்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மாவட்டத்தில் லால்குடி கீழவீதி மகாமாரியம்மன் கோவிலின் விழாவையொட்டி 16ஆம் தேதி அபிஷேகபுரம் எனுமிடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதியில் ஆயுதப்படை சேர்ந்த இரண்டு பெண் காவல்துறையினர் நடந்து செல்கையில் வாலிபர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ பதிந்து வடிவேலுவின் காமெடி வசனத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீசார் இதுகுறித்து லால்குடி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் பெண் போலீசாரை கேலியாக வீடியோ சித்தரித்து போட்டவர் மதுரையை சேர்ந்த கண்ணன் என தெரியவந்ததை தொடர்ந்து அவர் மேல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களை அவதூறாக சித்தரித்தல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் இது போன்ற மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.