தமிழ் திரையுலகின் 90 காலக்கட்டங்களில் கிராமத்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல்வேறு படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றது. எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன், என்ன பெத்த ராசா, கரகாட்டக்காரன, பாட்டுக்கு நான் அடிமை ஆகிய திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது நீண்ட இடைவேளைக்கு பின் ராமராஜன் மீண்டுமாக கதாநாயகனாக சாமானியன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை தம்பிக் கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கிய ராகேஷ் இயக்குகிறார். இதை எட்செட்ரா என்டர் டெயின்மென்ட் சார்பாக வி.மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக நக்சாசரண் நடிக்கிறார். அத்துடன் முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், இந்தி உட்பட 5 மொழிகளில் தயாராகிறது. இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் அண்மையில் வெளியான நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இவற்றில் படக்குழு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இவ்விழாவில் ராதாரவி பேசியதாவது “இதுவேற ரூட்டில் போய் இருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ என்னவோ ராமராஜன் இப்படத்தில் வந்து இணைந்துவிட்டார். நான் ராம.நாராயணன் இயக்கத்தில் பேய்வீடு திரைப்படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அப்படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் ஒருசில விஷயங்களை கவனித்து சீக்கிரமாக நீ நடிகன் ஆகி விடுவாய் என சொன்னேன். அதன்பின் அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.
இதற்கிடையில் ராமராஜன் என்றைக்குமே ரஜினி கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை. அவரது திரைப்படங்கள் அந்த இருவரின் படங்களைவிட நன்றாக ஓடின அவ்வளவு தான். எனினும் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்கமுடியாது. ஒரு முறை நடிகர் கமல் விமான நிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல் தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகத்தில் தொட்டு பார்த்தாராம். இப்போதும் அதுபோன்ற ஹேர்ஸ்டைலுடன் தான் காட்சியளிக்கிறார். அவருக்கு மனசு சுத்தம் ஆகும்.
அதனால்தான் முடிகொட்டவில்லை என நினைக்கிறேன். இயக்குநர் ராகேஷ் இதற்கு முன் இயக்கிய மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன திரைப்படத்தில் கூப்பிட்டு ஒருநாள் மட்டும் வேலை கொடுத்தார். தற்போது கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி இப்படத்தில் 7 நாட்கள் வேலை கொடுத்தார். அனைவரும் தியேட்டருக்கு வந்து படம்பார்க்க வேண்டும். அவ்வாறு தியேட்டருக்கு வந்தால் செலவாகிறது என்று சொல்லக்கூடாது. ஏனெனில் படம் பார்க்க வந்தால் டிக்கெட் மட்டும் வாங்குங்கள். பாப்கார்ன், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்கி நீங்களாக செலவை இழுத்துவிட்டுக் கொண்டு அதற்கு விலைவாசியை காரணம் காட்டாதீர்கள்” என்று அவர் பேசினார்.