வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள லெட்சுமாங்குடி பகுதியில் முத்துக்குமரன்- வித்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். உள்ளூரில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்த முத்துக்குமரன் போதிய வருமானம் இல்லாததால் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு முத்துக்குமரனை ஒட்டகம் மேய்க்க கூறியுள்ளனர். இதுகுறித்து முதலாளியிடம் கேட்டபோது முத்துக்குமரனுக்கும் முதலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 7-ஆம் தேதி முத்துக்குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதே போல் வேறு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சில பெண்கள் மனு அளிக்க சென்றுள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெரிய காரைகாட்டைச் சேர்ந்த செல்வரங்கன், பகண்டையைச் சேர்ந்த சரவணன், பில்லாலி தொட்டியை சேர்ந்த பிரசாந்த் ஆகியோர் ஓமன் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அங்கு வெல்டிங் வேலை கொடுக்காமல் அவர்களுக்கு தோட்ட வேலை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத சம்பளத் தொகையை கேட்டதற்கு உரிமையாளர்கள் பணத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சம்பளம் கேட்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுப்பதோடு, 2 லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என அவர்கள் கூறியதாக தெரிகிறது. எனவே சொந்த ஊருக்கு வர முடியாமல் தவிக்கும் 3 பேரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனதில் குறிப்பிட்டுள்ளனர்.