கோவிலில் பிச்சை எடுத்தவர் 8 லட்சத்தை அந்த கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யாதி ரெட்டி என்பவர் சாய்பாபா கோயில் முன்பு சுமார் ஏழு ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென கோவிலுக்கு ரூபாய் எட்டு லட்சத்தை அவர் நன்கொடையாக வழங்கினார். இதுகோவிலை சேர்ந்தவர்கள் மனதிலும் அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் மனதிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது “40 ஆண்டுகளாக ரிக்ஷ ஒட்டிக்கொண்டிருந்த நான் எனது முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக பிச்சை எடுக்கத் தொடங்கினேன். எனக்கு பணம் தேவை என்று எதுவும் இல்லாத காரணத்தினால் பிச்சை எடுத்த காசுகளை சேமித்து வைத்து கடந்த வருடம் ஒரு லட்சம் ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தேன். அதன் பிறகு எனக்கு அதிகமாக பணம் வந்து சேரவே மொத்தமாக தற்போது எட்டு லட்சத்தை நன்கொடையாக கொடுத்து உள்ளேன்” என கூறினார்.
கோவில் நிர்வாகத்தினரிடம் இது குறித்து கேட்ட பொழுது, யாதி ரெட்டி கொடுத்த நன்கொடைப் பணம் கோவிலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும், அவர்கள் யாரிடமும் நன்கொடை கேட்டு பெறுவது இல்லை எனவும், மக்கள் மனதார கொடுத்தால் கோவிலில் வளர்ச்சி கருதி ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்கள்.