அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலில் ஒ. பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக வந்தாலும், எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
அதோடு கட்சி அலுவலகம் தொடர்பான பிரச்சனையிலும் எடப்பாடியிடம் கட்சி அலுவலக சாவியை நீதிமன்றம் ஒப்படைக்க வலியுறுத்தியதால், அதிமுகவில் எடப்பாடியின் கையே ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓ. பன்னீர்செல்வம் விடாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இபிஎஸ்ஸும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இதுபோன்ற விவகாரங்களில் பெரும்பாலும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கை காட்டும் என்பதால், பாஜக மேலிடம் தேர்தல் ஆணையத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஓ. பன்னீர் செல்வத்திற்கு தைரியம் கொடுத்துள்ளது.
இந்த தகவலை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணத்தின் போது தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் சின்னம் தொடர்பாக மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு டெல்லி பயணத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து டெல்லி மேலிடம் அவரை சந்தித்து பேசுவதற்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், தற்போது பேசுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது எடப்பாடி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டெல்லி பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியில் தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தன் பக்கம் தான் இருப்பதாக கூற திட்டமிட்டுள்ளதாகவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் சேர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாஜக மேலிடம் அதிமுகவில் ஒற்றைதலையை விரும்பவில்லை எனவும் அனைவரும் கூட்டாக சேர்ந்து செயல்படுவதை தான் விரும்புகிறது எனவும் சிலர் கூறுகின்றனர்.
இது பற்றி பாஜக மேலிடம் எடப்பாடிக்கு பலமுறை புரிய வைக்க முயற்சி செய்தும் அவர் புரிந்து கொள்ளவில்லை. இதனால் தான் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதி வழங்காததாக கூறப்படுகிறது. மேலும் தற்போதைய சந்திப்பின் போதும் எடப்பாடி பழனிச்சாமியிடம் உட்கட்சி மோதல் இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையே பிரதமர் மோடி அறிவுறுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.