சென்னையில் கேக்கில் கஞ்சா கலந்து விற்பனை செய்யும் புதிய யுக்தியை கஞ்சா வியாபாரிகள் கையாண்டு வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா கேக் விற்பனை அமோகமாக நடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சேட்டு, சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் விஜய்ரோஷன் டேக்கா, பச்சை குத்தும் நிறுவனம் நடத்தி வந்த தாமஸ் ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் இருந்து கஞ்சா கேக் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஓட்டல் அதிபரான விஜய்ரோஷன் கஞ்சா கலந்த பிறந்தநாள் கேக் உள்ளிட்ட கேக்குகளை கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் ஓசையின்றி விற்பனை செய்து வந்துள்ளார். இந்த கேக்குகளை வாலிபர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆகியோரும் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர். கஞ்சாவை கேக்குடன் கலந்து சாப்பிடும் போது கஞ்சா வாசனை வராது. கேக் சாப்பிடுவது போலவே இருக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் தான் போதை ஏறும். இதனால் அந்த பழக்கத்துக்கு கல்லூரி மாணவிகள், மாணவர்கள் பலர் அடிமையாகி உள்ளனர். இந்த கஞ்சா கலந்த கேக்கை, கேக் வியாபாரி ஒருவர் வீட்டில் வைத்து தயாரித்து விஜய ரோஷனுக்கு கொடுத்துள்ளார்.
வழக்கமாக கேக் தயாரிக்கும் போது உள்ள நடைமுறையை பயன்படுத்தி அதற்கான எசன்ஸ் உள்ளிட்ட பொருட்களில் கஞ்சா பொடியை கரைத்து கஞ்சா கேக் தயாரித்துள்ளார். இந்த நிலையில் கஞ்சா கேக் தயாரித்து கொடுத்த கேக் வியாபாரியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை பிடிக்கும் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.