வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாதிரகுடி கீழ தெருவில் புனித வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தோகூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு வீரராகவன்(32) என்ற தம்பி இருக்கிறார். இவர் திருக்காட்டு பள்ளியில் இருந்து பேருந்தில் பாதிரக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது செல்போன் வேலை செய்யவில்லை என அதனை தூக்கி எரிந்துள்ளார். அந்த செல்போன் பேருந்தில் பயணித்த அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக விழுந்தது.
இதனால் அந்த பெண்ணின் உறவினர்களான இளையராஜா(30), விஜயரங்கம்(37), ராஜா நாகம்(40) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரும் வீட்டிற்கு வந்து குளித்துக் கொண்டிருந்த எனது தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தெருவில் இருக்கும் மரத்தில் கட்டி வைத்து எனது தம்பியை அடித்து சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனிதவள்ளி புகாரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் சிறுவன் உட்பட நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.