இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்குசெட்டிபாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிடுவதில் ஆர்வமாக இருந்த பூமிகாவை ஏராளமானவர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனை பிரகாஷ் கண்டித்ததால் பூமிகா தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து பண்ருட்டியில் இருக்கும் பேக்கரி கடையில் வேலை பார்த்தபோது பூமிகாவுக்கு ஆட்டோ ஓட்டுனர்களான சக்திவேல், சுமன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பூமிகா யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 9-ஆம் தேதி சுமன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சக்திவேலை நேரில் சந்தித்து பூமிகாவுடன் பேசுவதை நிறுத்தி விடுமாறு கூறியுள்ளனர். அதற்கு சக்திவேல் மறுப்பு தெரிவித்ததால் அவரை சுமனும், அவரது நண்பர்களும் இணைந்து வெட்டி கொலை செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுமன், குணா, பட்டீஸ்டா குணா, வசந்தகுமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் சக்திவேல் கொலை செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பூமிகா தனது வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த பூமிகாவை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.